என் தமிழ்

மலாயா பல்கலைக்கழக தமிழ் மன்றத்தின் 52வது மாணவர் சமூக நலப்பணி நிறைவு விழா : டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தொடக்கிவைத்தார்

கோலாலம்பூர், 02 ஆகஸ்ட் 2026 : மலாயா பல்கலைக்கழக தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த 52வது மாணவர் சமூக நலப்பணி (Student Service Corps) நிறைவு விழாவில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அரை நூற்றாண்டுக்கும் மேலாக மலாயா பல்கலைக்கழக தமிழ் மன்ற மாணவர்கள் சமூக சேவையை தொடர்ந்து முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது என்றார். இந்தத் திட்டம், பல தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் இடையே உறுதியான பாலமாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறிய சரவணன், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்ற கனவு இன்று நனவாகி வருவதாக தெரிவித்தார்.

“தீபம் ஒன்று ஏற்றினால் இன்னொரு தீபம் ஏற்றப்படும்” என்ற உணர்வுடன், சமூகப் பொறுப்புணர்வை வளர்த்து சேவையாற்றி வரும் மலாயா பல்கலைக்கழக தமிழ் மன்ற மாணவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அவர்களின் சமூகப் பணிகள் எதிர்கால தலைமுறைக்கும் முன்மாதிரியாக அமையும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

மேலும், கல்வி மற்றும் சமூக சேவையை ஒருங்கிணைக்கும் இத்தகைய முயற்சிகள், இளைஞர்களின் தலைமைத்துவ திறனையும் சமூக அக்கறையையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தெரிவித்தார்.

Scroll to Top