பேராக், 02 ஆகஸ்ட் 2026 : ASEAN–சீனா கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி தொடர்பான அமைச்சர்களின் வட்டமேசை மாநாடு (ACMROCH) 2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு இரவு விருந்து, ASEAN நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக அமைந்தது.
வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ASEAN மற்றும் சீனாவைச் சேர்ந்த அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், உயரதிகாரிகள், ASEAN பொதுச் செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹோர்ன், சீனாவின் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற–ஊரக மேம்பாட்டு அமைச்சர் நி ஹோங், பேராக் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ சாரானி முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ங்கா கோர் மிங், அதிகாரப்பூர்வ மாநாட்டு அமர்வுகளுக்கு அப்பால் இத்தகைய சந்திப்புகள் பரஸ்பர புரிந்துணர்வு, நட்புறவு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன என்றார். ASEAN–சீனா உறவு மேலும் வலுப்பெற இத்தகைய நேரடி தொடர்புகள் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பேராக் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள், கலாசாரம் மற்றும் சுற்றுலா சிறப்புகளை சர்வதேச பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பாகவும் இந்த இரவு விருந்து அமைந்தது. ‘Visit Malaysia 2026’ ஆண்டை முன்னிட்டு மலேசியாவின் சுற்றுலா வளங்களை உலக அரங்கில் விளம்பரப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் ACMROCH 2026 மாநாட்டில், நிலையான நகரங்கள், தரமான வீட்டுவசதி மற்றும் ஒருங்கிணைந்த சமூகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து சுமார் 300 பிரதிநிதிகள் கலந்துரையாடி வருகின்றனர். மாநாடு ASEAN–சீனா நாடுகளுக்கு இடையேயான நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறைகளில் நடைமுறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






