நெகிரி செம்பிலான், 29 ஜூலை 2026 : நெகிரி செம்பிலானில் உள்ள சிம்பாங் துரியான் பகுதியில் மக்களைச் சந்தித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சென்னா (Chennah) தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அந்தோணி லோக் மற்றும் பெர்தாங் தொகுதி வேட்பாளர் உம்ரி அப்துல் கோய்ஸுக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது உரையாற்றிய அவர், சென்னா தொகுதியில் அந்தோணி லோக் மலாய், சீனர், இந்தியர் மற்றும் பழங்குடியினர் என அனைத்து இன மக்களுக்கும் சமமாக சேவை செய்து சிறந்த மக்கள் பிரதிநிதியாக தன்னை நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.
அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்தபோதிலும், அவர் சீனர் என்பதற்காக மட்டுமே சிலர் அவரை நிராகரிக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அன்வார் குறிப்பிட்டார். மக்களின் பணத்தை அபகரிக்கவோ, நிலங்களை பறிக்கவோ, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறவோ அவர் செய்யவில்லை; இருந்தும் அவரது இனத்தை மட்டுமே காரணமாகக் கொண்டு எதிர்ப்பது தவறான அரசியல் அணுகுமுறை என்றார்.
வாக்காளர்கள் ஒருவரின் இனம் அல்லது நிறத்தை வைத்து அல்ல, அவர்களின் நேர்மை, சாதனை மற்றும் மக்களுக்கான சேவையை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மக்கள் மீண்டும் ஆணை வழங்கினால், நெகிரி செம்பிலான் மக்களின் நலனுக்காக மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்ற உறுதியையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளிப்படுத்தினார்.






