29 ஜூலை 2026 : இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான பாலிமர் ரூபாய் நோட்டுகள் களச் சோதனை (Field Trial) அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
சோதனைக்காக தலா 100 கோடி என மொத்தம் 200 கோடி பாலிமர் ரூபாய் நோட்டுகளை அச்சிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் மூலம் புதிய நோட்டுகளின் நீடித்த தன்மை, தரம் மற்றும் பயன்பாடு பல்வேறு சூழ்நிலைகளில் மதிப்பீடு செய்யப்படும்.
பாலிமர் நோட்டுகள் காகித நோட்டுகளை விட அதிக காலம் பயன்படுத்தக்கூடியவை. அவை எளிதில் கிழியாது, நீரில் சேதமடையாது மற்றும் போலி நோட்டுகளைத் தடுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போதுள்ள காகித ரூபாய் நோட்டுகளை முழுமையாக மாற்றும் எந்தத் திட்டமும் தற்போது இல்லை என்றும், பாலிமர் நோட்டுகள் முதற்கட்டமாக சோதனை நோக்கத்திற்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.






