என் தமிழ்

SJKT சுங்கை பாக்காப் புதிய கட்டடத் திட்டம் : நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த மடானி அரசாங்கத்தின் வெற்றி! – கோபிந்த் சிங் டியோ

பினாங்கு, 21 ஜூலை 2026 : கடந்த 11 ஆண்டுகளாக தாமதமடைந்திருந்த சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு, 2027ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நிறைவடையும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் அறிவித்திருப்பதை இலக்கவியல் அமைச்சர் மற்றும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ வரவேற்றுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் இணைந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள இந்த முன்னேற்றம், அந்த நீண்டகால முயற்சிகளுக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்காக RM12.67 மில்லியன் நிதியை அங்கீகரித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கிற்கும் கோபிந்த் சிங் டியோ தனது நன்றியைத் தெரிவித்தார்.

இது ஒரு புதிய பள்ளிக் கட்டடத் திட்டம் மட்டுமல்ல; பல ஆண்டுகளாக காத்திருந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் இந்திய சமூகத்திற்கு கிடைத்த நீதியும் நம்பிக்கையும் ஆகும் என்றும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளை மீளாய்வு செய்து, நிதி, சட்டம் மற்றும் நிர்வாகத் தடைகளை நீக்கி மக்களுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்குவதே மடானி அரசின் செயல்முறை எனக் குறிப்பிட்ட அவர், சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளித் திட்டம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றார்.

மேலும், உட்கட்டமைப்பு, நிலப் பிரச்சினை, மாணவர் சேர்க்கை, பள்ளி இடமாற்றம் மற்றும் புதிய கட்டடத் தேவைகள் தொடர்பாக சவால்களை எதிர்கொண்டு வரும் பிற தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோபிந்த் சிங் டியோ உறுதியளித்தார்.

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யும் முயற்சிகள் தொடரும் என்றும், அறிவிப்புகள் மட்டுமன்றி ஒவ்வொரு திட்டமும் முழுமையாக நிறைவேறும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top