கோலாலம்பூர், 04 செப்டம்பர் 2026 : மலேசியாவுக்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள உயர்திரு சோம்நாத் கோஷ் கோலாலம்பூருக்கு வந்து தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த அவரை, மலேசியாவுக்கான இந்தியத் துணைத் தூதர் ஹிதேஷ் ராஜ்பால் மற்றும் மலேசிய வெளியுறவு அமைச்சகமான விஸ்மா புத்ராவின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியத் தூதரகத்தில் தனது பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட சோம்நாத் கோஷ், தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்தார். இந்தியா–மலேசியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் புதிய தூதர் தலைமையில் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் மலேசியா இடையிலான நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் நிலவும் தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் வகையில் சோம்நாத் கோஷின் பதவிக்காலம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







