சிலாங்கூர், 21 ஜூலை 2026 : டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் அண்மையில் ஏற்பட்ட தொடர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள், குறிப்பாக கம்போங் சுங்கை காயு ஆரா பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, நிரந்தர தீர்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் தியோ தீவிரப்படுத்தியுள்ளார்.
இதற்காக, வடிகால் மற்றும் பாசனத் துறை (DID), பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ), தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கட்டுமான மேம்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளுடன் அவர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில், வெள்ளப் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கைகள் மட்டுமின்றி, நீண்டகால நிரந்தர தீர்வுகளுக்கான விரிவான திட்டங்களையும் விரைவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அவர் அறிவுறுத்தினார்.
உடனடி நிவாரண நடவடிக்கைகளும், நீண்டகால வெள்ளத் தடுப்பு திட்டங்களும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், டாமன்சாரா மக்கள் தங்களது வீடுகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் பாதுகாப்பாக வாழும் உரிமை கொண்டவர்கள் என்றும் கோபிந்த் சிங் தியோ வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிசெய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.






