என் தமிழ்

TVET பட்டதாரிகளுக்கு மாதம் RM5,000 வரை சம்பளம் : MARA புதிய திட்டம்

கோலாலம்பூர், 21 ஜூலை 2026 : தொழிற்கல்வி மற்றும் தொழில்பயிற்சி (TVET) மாணவர்களுக்கு உயர்ந்த சம்பளமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், MARA நிறுவனம் ‘MARA-SWITCHPRO’ என்ற புதிய பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், Schneider Electric Malaysia மற்றும் மேலும் மூன்று தொழில்துறை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், பங்கேற்பாளர்கள் ஆறு மாதங்கள் தீவிர தொழில்நுட்பப் பயிற்சியும், தொடர்ந்து ஆறு மாதங்கள் தொழில்துறையில் நேரடி பணிப் பயிற்சியும் பெறவுள்ளனர். மேலும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட Schneider Electric திறன் சான்றிதழையும் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பட்டதாரிகள், மாதம் RM5,000 வரை தொடக்க ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என MARA தலைவர் டத்தோ டாக்டர் அஸ்ராப் வாஜ்டி துசுகி தெரிவித்தார். தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

முதல் கட்டத்தில் பயிற்சி பெற்ற 18 பேரும் வெற்றிகரமாக பயிற்சியை முடித்து தொழில்துறையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இரண்டாம் கட்டத்தில் 22 பேர் ஆகஸ்ட் மாதம் பயிற்சியைத் தொடங்கவுள்ளனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 200 பேரை உருவாக்க MARA இலக்கு நிர்ணயித்துள்ளது.

Scroll to Top