மாஸ்கோ, 18 ஜூலை 2026 : உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தம்போவ் பிராந்தியத்தின் கோடோவ்ஸ்க் நகரில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான வைல்ட்பெரீஸ் (Wildberries) நிறுவனத்தின் கிடங்கு மீது ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில் இரவு பணியில் இருந்த 7 ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
மாஸ்கோ அருகே உள்ள எலெக்ட்ரோஸ்டால் பகுதியில் மற்றொரு கிடங்கு தாக்கப்பட்டதில் மேலும் பலர் காயமடைந்தனர். நோகின்ஸ்க் பகுதியில் எண்ணெய் சேமிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்த மகப்பேறு மருத்துவமனையில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த தாக்குதல்கள் ட்ரோன் உற்பத்தி மற்றும் ராணுவ தளவாட விநியோகத்துடன் தொடர்புடைய முக்கிய தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஒரே இரவில் 379 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.






