18 ஜூலை 2026 : 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக சாம்பியனை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சத்தில் தொடங்கி ரூ.27 லட்சம் வரை விற்பனையாகி வருகின்றன.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், ஈஸ்ட் ரதர்ஃபோர்டில் உள்ள நியூயார்க்–நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதால் டிக்கெட் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பிபா அறிமுகப்படுத்திய ‘டைனமிக் பிரைசிங்’ (Dynamic Pricing) முறையின் காரணமாக, தேவைக்கு ஏற்ப டிக்கெட் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில பிரீமியம் டிக்கெட்டுகளின் விலை 32,000 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகப்படியான டிக்கெட் விலை குறித்து ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உலகக் கோப்பை போன்ற சர்வதேச விளையாட்டு விழாக்கள் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் எட்டக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.






