18 ஜூலை 2026 : சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் மானிய மறுசீரமைப்பு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் ஒப்பந்ததாரர்களின் செயல்பாட்டு செலவினச் சுமையை குறைக்கும் நோக்கில், மாதந்தோறும் 300 லிட்டர் டீசலை ‘ஆர்மடா’ அட்டை (Fleet Card) மூலம் வழங்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சலுகை, கூட்டாண்மை நிறுவனங்கள் அல்லது தனியுரிமை நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசல் வாகனங்களுக்கு வழங்கப்படும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமைச்சகம் முன்வைத்த உடனடி தலையீட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், நிறுவனங்களின் பெயரில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மானிய உதவியைப் பெறுவதில் சிரமம் எதிர்கொண்ட நுண் தொழில் முனைவோருக்கு இந்த நடவடிக்கை பெரிதும் பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த நிறுவனங்கள் மானிய டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (SKDS) கீழ் உள்ள பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து பிரிவுகளில் இடம்பெறாததால், அவர்களின் சிறு வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்த சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அமைச்சர் விளக்கினார்.
டீசல் மானியத் திட்டத்தின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்தும் வகையில், பொதுமக்களின் வாழ்வாதாரச் செலவு, மானிய முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் அரசின் நிதிநிலை ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
சபா மற்றும் சரவாக்கின் உள்பகுதிகளில் தகுதியான பயனாளர்கள் எவரும் விடுபடாத வகையில், பதிவு மற்றும் தகுதி உறுதிப்படுத்தும் பணிகளில் மாநில அரசின் சம்பந்தப்பட்ட முகமைகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், மெனும்போக்கில் உள்ள கம்போங் செகாலோங்கில் செயல்படுத்தப்படும் “கம்போங் அங்காட் MADANI” திட்டத்தின் கீழ், பல்நோக்கு மண்டபம், கிராம நுழைவுவாயில், சாலை மேம்பாடு, வடிகால் அமைத்தல் மற்றும் சூரிய ஒளி தெருவிளக்குகள் நிறுவுதல் உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்காக 5 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டங்கள் இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.






