18 ஜூலை 2026 : 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, வரலாற்றில் முதல் முறையாக பிரத்யேக ‘சாம்பியன்ஷிப் ரிங்’ (Championship Ring) வழங்கப்படவுள்ளது.
உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கோப்பை மற்றும் தங்கப் பதக்கங்களுடன், இந்த ஆண்டில் கூடுதலாக சாம்பியன்ஷிப் ரிங்கும் வழங்கப்படுவது புதிய அம்சமாகும். அமெரிக்க விளையாட்டு மரபை முன்மாதிரியாகக் கொண்டு இந்த நடைமுறையை பிபா அறிமுகப்படுத்தியுள்ளது.
மொத்தம் 2,026 சிறப்பு மோதிரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 30 மோதிரங்கள் சாம்பியன் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,996 மோதிரங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களுக்கான அதிகாரப்பூர்வ நினைவுப் பொருளாக விற்பனை செய்யப்பட உள்ளன.
இறுதிப்போட்டி முடிந்தவுடன், சாம்பியன் அணியின் கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்கு தற்காலிக சாம்பியன்ஷிப் ரிங் வழங்கப்படும். பின்னர், வீரர்கள் ஒவ்வொருவரின் விரல் அளவுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட நிரந்தர மோதிரங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும். 2026 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ள நிலையில், உலகக் கோப்பை வரலாற்றில் புதிய பாரம்பரியமாக இந்த சாம்பியன்ஷிப் ரிங் அறிமுகமாகியுள்ளது.






