கோலாலம்பூர், 15 ஜூலை 2026 : தாப்பா தொகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நாடாளுமன்றத்திற்கு மேற்கொண்ட கல்விசார் பயணத்தில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்து கொண்டு அவர்களை வரவேற்றார்.
இந்தச் சந்திப்பின் போது, இளம் வயதிலேயே மாணவர்களுக்கு ஜனநாயக அமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் பங்கு குறித்து அறிமுகம் அளிப்பது மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றப் பயணம் போன்ற அனுபவங்கள், மாணவர்கள் நாட்டின் நிர்வாக அமைப்பை புரிந்துகொள்ள உதவுவதோடு, தேசிய அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இத்தகைய அனுபவங்கள், எதிர்காலத்தில் அறிவார்ந்த, பொறுப்புணர்வுள்ள மற்றும் சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைமுறையை உருவாக்குவதற்கு உதவும் என சரவணன் வலியுறுத்தினார்.
தாப்பா மாணவர்களின் இந்தப் பயணம், அவர்களுக்கு மறக்கமுடியாத கல்வி அனுபவமாக அமைய வேண்டும் என்றும், நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பங்களிக்கும் பொறுப்பான குடிமக்களாக உருவாகும் ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.






