புத்ராஜெயா, 15 ஜூலை 2026 : மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவான (MITRA), இந்திய சமூகத்தின் கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கில் ‘செலிக் மதானி 2026’ இரண்டாம் கட்டத் திட்டத்தையும், ‘தர்மா மதானி’ மூன்றாம் கட்டத் திட்டத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் தொடக்க விழா, மனிதவள அமைச்சர் சார்பில் கெசுமா (KESUMA) அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (செயல்பாடுகள்) சுடெக்னோ பின் அகமட் பெலோன் தலைமையில், புத்ராஜெயாவில் உள்ள பெர்கேசோ கோபுரத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த ஜூலை 7ஆம் தேதி தெற்கு மண்டலத்தில் தொடங்கப்பட்ட இம்முயற்சி, தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், ‘செலிக் மதானி 2026’ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் 117 மழலையர் பள்ளி நிர்வாகிகள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். மேலும், ‘தர்மா மதானி’ மூன்றாம் கட்டத் திட்டத்தின் கீழ் 120 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டன.
2026ஆம் ஆண்டுக்கான ‘செலிக் மதானி’ திட்டத்திற்காக RM10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், பி40 வருமானப் பிரிவைச் சேர்ந்த நான்கு முதல் ஆறு வயதுடைய இந்தியக் குழந்தைகளுக்கு தரமான ஆரம்பக் கல்வி வழங்கப்படவுள்ளது. இதுவரை 162 மழலையர் பள்ளிகள் இத்திட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளன. இதன் மூலம் 3,612 குழந்தைகள் பயனடைவதுடன், RM8.87 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சுடெக்னோ பின் அகமட் பெலோன், கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதில் மதானி அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், சமூக நலனை மேம்படுத்தும் வகையில் ஒதுக்கப்படும் அனைத்து நிதிகளும் வெளிப்படைத்தன்மையுடனும், திறம்படவும், பயனுள்ள முறையிலும் மக்களிடம் சென்றடைவதை மித்ரா தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.






