என் தமிழ்

அல்சைமர் சிகிச்சையில் புதிய அத்தியாயம் : மலேசியாவில் புதிய சிகிச்சை அறிமுகம்

கோலாலம்பூர், 15 ஜூலை 2026 : அல்சைமர் நோயின் ஆரம்ப நிலையிலுள்ள நோயாளிகளுக்காக, நோயின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தும் ‘நோய் மாற்றும் சிகிச்சை’ (Disease-Modifying Therapy) முறையை மலேசியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் அல்சைமர் சிகிச்சை துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

லெகனெமாப்’ (Lecanemab) எனப்படும் இந்த புதிய சிகிச்சை, அல்சைமர் நோயின் அடிப்படைக் காரணிகளில் ஒன்றான மூளையில் தேங்கும் அமிலாய்டு (Amyloid) புரதத்தை குறிவைத்து செயல்படுகிறது. இது நோயை முழுமையாக குணப்படுத்தாது என்றாலும், அதன் முன்னேற்றத்தை கணிசமாக மெதுவாக்கி, நோயாளிகள் நீண்ட காலம் சுயமாக வாழ உதவுகிறது.

இந்தச் சிகிச்சை, நினைவாற்றல் குறைபாடு மற்றும் ஆரம்பகட்ட அல்சைமர் அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே பொருத்தமானதாகும். சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன் சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மூளைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வயதான மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அல்சைமர் போன்ற மறதி நோய்களின் தாக்கமும் உயர்ந்து வருகிறது. இந்த புதிய சிகிச்சை, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களது குடும்பத்தினரின் பராமரிப்புச் சுமையையும் குறைக்க உதவும் என சுகாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Scroll to Top