என் தமிழ்

பினாங்கில் கோலாகலமாக நடைபெற்ற கண்ணதாசன் விழா 2026

பினாங்கு, 15 ஜூலை 2026 : கண்ணதாசன் விழா பினாங்கு 2026 நிகழ்ச்சி, கடந்த ஜூலை 12ஆம் தேதி பேராயில் அமைந்துள்ள முனீஸ்வரர் ஆலய மண்டபத்தில் சுமார் 700 பேரின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், குத்துவிளக்கு ஏற்றப்பட்டதுடன், அண்மையில் காலமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி நினைவாக ஒரு நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பினாங்கு மாநில மெலிசை பயணம் இசைக் குழு வழங்கிய கவியரசு கண்ணதாசனின் பாடல்களைக் கொண்ட இசை நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், கண்ணதாசனின் இலக்கியப் பங்களிப்புகள் மற்றும் தமிழுக்காக அவர் ஆற்றிய சேவைகள் குறித்து உரையாற்றினார்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த நடிகரும் கவிஞருமான ஜோ மல்லூரி மற்றும் தமிழறிஞர் டாக்டர் பர்வீன் சுல்தானா ஆகியோரும் சிறப்புரையாற்றினர். மேலும், மாநில நிர்வாகிகள், செனட்டர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தமிழ்மொழி மற்றும் இந்திய சமூகத்திற்கு சிறப்பான சேவையாற்றிய டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம், டத்தோஸ்ரீ புலந்திரன், புருஷோத்தமன், சுப்ராவ் மற்றும் டாக்டர் மணமணி ஆகிய ஐந்து பேருக்கு தமிழ்த் தொண்டர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் கவியரசு கண்ணதாசனின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Scroll to Top