என் தமிழ்

AI திறன் மேம்பாட்டுக்கு மலேசியா–தென் கொரியா புதிய கூட்டாண்மை : கொரியா–ஆசியான் டிஜிட்டல் அகாடமி தொடக்கம்

கோலாலம்பூர், 15 ஜூலை 2026 : மலேசியாவின் டிஜிட்டல் அமைச்சகம், தென் கொரியாவுடன் இணைந்து கொரியா–ஆசியான் டிஜிட்டல் அகாடமி (KADA) திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அரசு-அரசு (G2G) ஒத்துழைப்புத் திட்டம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தென் கொரியாவின் தேசிய தகவல் தொழில்நுட்பத் தொழில் மேம்பாட்டு முகமை (NIPA) தலைமையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஆசியான் நாடுகளில் AI திறனாளிகளை உருவாக்கும் பிராந்திய முயற்சியாக அமைகிறது.

மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (MDEC) உள்ளூர் ஒருங்கிணைப்பாளராக செயல்படும் நிலையில், Premier Digital Tech Institutions (PDTIs) வழியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மலேசியாவில், யுனிவர்சிட்டி தொழில்நுட்ப MARA (UiTM) – கணினி மற்றும் கணித அறிவியல் பீடம் (FSKM) இத்திட்டத்தின் வரவேற்பு நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், சுமார் 200 மலேசிய AI மற்றும் டிஜிட்டல் நிபுணர்களுக்கு சிறப்புப் பயிற்சியும், சர்வதேச தொழில்துறை அனுபவமும் வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டம் மலேசிய கல்வி நிறுவனங்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதோடு, உலகத் தரத்திலான நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் என டிஜிட்டல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Scroll to Top