என் தமிழ்

SJKT தமிழ்ப்பள்ளி மின்கட்டண சலுகை : TNB அதிகாரிகளுடன் ஆலோசனை

சிலாங்கூர், 14 ஜூலை 2026 : சிலாங்கூரில் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளிகளின் (SJKT) மின்கட்டணச் சுமையை குறைக்கும் நோக்கில், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) சிலாங்கூர் அதிகாரிகளுடன் மாநில அரசின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வி. கணபதிராவ், தமிழ்ப்பள்ளிகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை அல்லது மின் கட்டணத் தள்ளுபடி (ரீபேட்) வழங்கும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பள்ளிகள் எதிர்கொள்ளும் பயன்பாட்டுச் செலவினங்களைக் குறைப்பதன் மூலம், கல்வித் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக நிதியை சிறப்பாக பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் கூறினார்.

கல்வித் துறையை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்பட சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகள் பயனடையும் வகையில் விரைவில் நடைமுறைக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கான நீண்டகால ஒத்துழைப்புக்கு அடித்தளமாக அமையும் என்றும், அதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்திற்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கணபதிராவ் தெரிவித்தார்.

Scroll to Top