பினாங்கு, 14 ஜூலை 2026 : மலேசிய இந்து சங்கம் (MHS) ஜார்ஜ்டவுன் வட்டார மன்றம் ஏற்பாடு செய்த 48-வது திருமுறை ஒப்பித்தல் விழா 2026, பினாங்கு ஜாலான் சுங்காயில் அமைந்துள்ள எஸ்.ஜே.கே.(த) இராமதாசர் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் 70 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, சைவ சமய பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் திருமுறைகளை பக்தி உணர்வுடன் ஒப்பித்தனர்.
விழாவின் தொடக்க நிகழ்வில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தார். நிறைவு விழாவில் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலத் தலைவர் விவேக ரத்னா தர்மன் ஆனந்தன், மாநிலச் செயலாளர் விவேக ரத்னா சசிரேகா பாலா, ஜார்ஜ்டவுன் வட்டார மன்றத் தலைவர் பி. செந்தில்குமார் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் டி. வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய விவேக ரத்னா தர்மன் ஆனந்தன், பள்ளி நேரத்திலேயே சமய வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பெற்றோர் தங்களது பிள்ளைகளை சமயக் கல்வி வகுப்புகளுக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த திருமுறை விழாவை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த மலேசிய இந்து சங்கம் ஜார்ஜ்டவுன் வட்டார மன்ற நிர்வாகிகள், ஆலய நிர்வாகங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.






