தெஹ்ரான், 14 ஜூலை 2026 : ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா தனது நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிநவீன கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தகவல் தொடர்பு வசதிகளைக் கொண்ட டுபோலெவ் Tu-214PU ரக சிறப்பு விமானத்தை ரஷ்யா தெஹ்ரானுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரெம்லின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ கட்டளை அமைப்புகளுக்காக பயன்படுத்தப்படும் இந்த விமானம், பாதுகாப்பான தகவல் தொடர்பு, உளவு கண்காணிப்பு மற்றும் மூலோபாய ஒருங்கிணைப்புக்காக வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த விமானத்தின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த விமானம் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை ரஷ்யா வெளியிடவில்லை. இருப்பினும், ரஷ்யா–ஈரான் இடையிலான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த விமானம் உயர்மட்ட ரஷ்ய அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதால், விரைவில் ரஷ்ய உயரதிகாரி ஒருவர் ஈரானுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.






