கோலாலம்பூர், 13 ஜூலை 2026 : சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் அவரது மனைவி ஜேன் இட்டோகி சண்முகரத்தினம் ஆகியோரின் அரசுமுறைப் பயணையொட்டி, கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் தேசிய வரவேற்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் அரசியார் ராஜா சரித் சோஃபியா ஆகியோர் கலந்து கொண்டு சிங்கப்பூர் அதிபருக்கு மரியாதை செலுத்தினர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, டத்தோ அமர் ஃபடில்லா யூசோப் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
தேசிய வரவேற்பு விழா, இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்கும் மரியாதை வழங்கப்பட்டதோடு, மலாய் அரசப் படையின் முதல் படைப்பிரிவைச் சேர்ந்த கௌரவ அணிவகுப்பை சிங்கப்பூர் அதிபர் பார்வையிட்டார்.
பின்னர், மாமன்னர் தம்பதியினர் சிங்கப்பூர் அதிபர் மற்றும் அவரது குழுவினருடன் சந்திப்பு நடத்தினர். நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
சிங்கப்பூர் அதிபரின் இந்த அரசுமுறைப் பயணம், 2024ஆம் ஆண்டு மே மாதம் மலேசிய மாமன்னர் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்கான பதில் பயணமாக அமைந்துள்ளது. மேலும், சுல்தான் இப்ராஹிம் 17ஆவது மாமன்னராக பதவியேற்ற பிறகு நடைபெறும் நான்காவது அரசுமுறைப் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.






