என் தமிழ்

பெண்கள் சேலை உடுத்தி பங்கேற்கும் ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சி – செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு

ஷா ஆலாம், 12 ஜூலை 2026 : மலேசியத் தமிழ் மணி மன்றம் (Kelab Bell Tamil Malaysia – KBTM) சார்பில், பெண்களின் ஒற்றுமை, உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் நடைபெறவுள்ள “Walkathon Bagi Wanita Bersari” (பெண்கள் சேலை உடுத்தி பங்கேற்கும் வாக்கத்தான்) நிகழ்ச்சியை முன்னிட்டு, ஷா ஆலமில் உள்ள KBTM தலைமையகத்தில் இன்று (12.07.2026) பிற்பகல் 2.30 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில், நிகழ்ச்சியின் நோக்கம், ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு குறித்து அமைப்பின் நிர்வாகிகள் விரிவாக விளக்கமளித்தனர். பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதோடு, தமிழர் பாரம்பரிய உடையான சேலையின் சிறப்பையும் சமூக ஒற்றுமையையும் உலகிற்கு எடுத்துக்காட்டுவதே இந்த வாக்கத்தானின் முக்கிய நோக்கமாகும் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், 2026 ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, Stadium JKR Seksyen 17, Shah Alam வளாகத்தில் வாக்கத்தான் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மலேசியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், குடும்பத்தினர், சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் சேலை அணிந்து பங்கேற்பதன் மூலம் தமிழர் பண்பாட்டையும், பெண்களின் சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான நிகழ்வாக இது அமையும் என்றும் கூறப்பட்டது.

மேலும், மலேசியாவின் தேசிய தின (Hari Merdeka) கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த வாக்கத்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பின் நிறைவில், அனைத்து தரப்பு பெண்களும், குடும்பங்களும், சமூக அமைப்புகளும் இந்த வாக்கத்தானில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்வு மலேசியத் தமிழர் சமூகத்தின் ஒற்றுமையையும், பெண்களின் பங்களிப்பையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Scroll to Top