என் தமிழ்

மலேசியா–தாய்லாந்து பேச்சுவார்த்தை : இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

புத்ராஜெயா, 10 ஜூலை 2026 : மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ மலேசிய பயணத்தை முன்னிட்டு, தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனும் பங்கேற்றார்.

இந்தச் சந்திப்பு, மலேசியா மற்றும் தாய்லாந்து இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதுடன், பொருளாதாரம் உள்ளிட்ட மூலோபாயத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும் ஆராயப்பட்டன.

இதன் போது, தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் ஜுலாபன் அமோர்ன்விவாட்டை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் ரமணனுக்கு கிடைத்தது. அப்போது, தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசியான் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அவர் அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்தார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஏற்பாடு செய்த அதிகாரப்பூர்வ மதிய விருந்திலும் ரமணன் கலந்து கொண்டார். அங்கு தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் அடுல் பூந்தும்ஜரோயென் மற்றும் தாய்லாந்து உள்துறை துணை அமைச்சர் ஜெசேத் தைசெத் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

மலேசியா மற்றும் தாய்லாந்து, பொருளாதார வளர்ச்சி, மக்களின் நலன் மற்றும் ஆசியான் பிராந்திய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக ரமணன் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமான வளர்ச்சிக்கு தொடர்ந்து அடித்தளமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Scroll to Top