என் தமிழ்

313 உள்ளூர் நிறுவனங்களுக்கு ஹலால் திட்டம் மூலம் 18.79 கோடி ரிங்கிட் விற்பனை வாய்ப்பு

கோலாலம்பூர், 09 ஜூலை 2026 : ‘ஹலால் ஹோம் க்ரோன் சாம்பியன்–சோர்சிங் பார்ட்னர்ஷிப் 2.0’ திட்டத்தின் மூலம், 2024 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 313 உள்ளூர் நிறுவனங்களுக்கு மொத்தம் 18 கோடியே 79 லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான விற்பனை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பயனடைந்த நிறுவனங்களில் 158 பூமிபுத்ரா நிறுவனங்களும், 52 பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களும் அடங்குகின்றன. ஹலால் தொழில்துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்தி, அவர்களின் வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (MATRADE) சார்பில், 22ஆவது மலேசிய சர்வதேச ஹலால் கண்காட்சி (MIHAS 2026) வரும் செப்டம்பர் 23 முதல் 26 வரை கோலாலம்பூரில் உள்ள மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெறவுள்ளது. இதில் 2,400 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுவதுடன், 1,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சந்தைகளில் உள்ளூர் ஹலால் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தயாரிப்புகளின் மதிப்பை உயர்த்துதல் மற்றும் பாரம்பரிய சந்தைகளை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைத்தல் ஆகியவை 2026ஆம் ஆண்டுக்கான அரசின் முக்கிய உத்திகளாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. உலகளாவிய ஹலால் தொழில்துறையில் மலேசியா தனது முன்னணி நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Scroll to Top