என் தமிழ்

துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு : 8 மாத தாமதத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

புத்ராஜெயா, 07 ஜூலை 2026 : மலாக்காவின் துரியான் துங்கலில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஜி. லோகேஸ்வரன், எம். புஷ்பநாதன் மற்றும் எம். புவனேஸ்வரன் ஆகியோரின் வழக்கில், எட்டு மாதங்களாகியும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து சட்டத்துறை தலைமை அதிகாரி (Attorney-General) விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஏபி (DAP) தேசியத் தலைவர் மற்றும் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வழக்கை போலீசார் குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக மறுவகைப்படுத்தியிருந்தனர். உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற கடுமையான குற்றப்பிரிவின் கீழ் வழக்கை மாற்றுவது வழக்கமல்ல என்றும், எனவே வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல தேவையான ஆதாரங்கள் இருப்பதாகவே இது காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் ஒலிப்பதிவு மற்றும் உடற்கூறு ஆய்வு அறிக்கைகளும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வழக்கை தொடர்ந்து தாமதப்படுத்துவது சாட்சிகளின் நினைவாற்றல் மங்குதல், ஆதாரங்கள் பாதிக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.

நீதியை நிலைநாட்டுவது சட்டத்துறை தலைமை அதிகாரியின் பொறுப்பாகும் என்றும், நீதி வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அது வழங்கப்படுவதை மக்கள் உணர வேண்டும் என்றும் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினர் கடந்த எட்டு மாதங்களாக நீதிக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் இனியும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்திலும் தாம் நேரடியாக இந்த விவகாரத்தை எழுப்பவுள்ளதாக தெரிவித்தார்.

Scroll to Top