05 ஜூலை 2026 : இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வழங்க முன்வந்த இ20 பெட்ரோலை (20 விழுக்காடு எத்தனால் கலந்த பெட்ரோல்) பூடான் அரசு ஏற்க மறுத்துள்ளது. வாகனங்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதற்கான அச்சம் மற்றும் தற்போதைய எரிபொருள் சேமிப்பு வசதிகள் போதுமானதாக இல்லாததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூடானின் வர்த்தகத் துறை வெளியிட்ட விளக்கத்தில், எத்தனால் கலந்த எரிபொருள் தண்ணீரை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், நாட்டில் உள்ள பழைய நிலத்தடி எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளில் அது மாசுபடும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் எரிபொருளின் தரம் குறைவதுடன், வாகனங்களின் இயந்திரத்தில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முழுமையாக இ20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு மாறும் சூழல் ஏற்பட்டாலும், அதற்கு முன்கூட்டியே போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும், எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்திய பிறகே இத்தகைய எரிபொருளை பரிசீலிக்க முடியும் என்றும் பூடான் வலியுறுத்தியுள்ளது.
தற்போதைக்கு, வழக்கமான பெட்ரோலையே தொடர்ந்து வழங்குமாறு இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் பூடான் கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






