என் தமிழ்

இணைய இணைப்பு பிரச்சினை : நேரடியாக ஆய்வு நடத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்

கோலாலம்பூர், 05 ஜூலை 2026 : நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் இணைய இணைப்புச் சிக்கல்களை விரைவாகத் தீர்க்க, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில் கூறுகையில், மக்களிடமிருந்து பெறப்படும் இணையச் சேவை தொடர்பான புகார்களை அலுவலகங்களில் இருந்தபடி மட்டுமே கையாளாமல், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உண்மையான நிலையை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இணைய இணைப்புக் குறைபாடுகள் மாநில வாரியாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவற்றை படிப்படியாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, பல நிறுவனங்கள் இணைந்து பயன்படுத்தும் வலையமைப்பு வசதியை முழுமையாகப் பயன்படுத்தி, சேவைத் தரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இணைய இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளைக் கண்டறிய, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் சேகரிக்கும் தரவுகளுடன், சேவைத் தரத்தை அளவிடும் பிற தொழில்நுட்பத் தகவல்களும் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் மக்களுக்கு நிலையான மற்றும் தரமான இணையச் சேவையை வழங்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Scroll to Top