கோலாலம்பூர், 03 ஜூலை 2026 : தேசிய டாக்சி துறையை நவீனமயமாக்கும் நோக்கில் தேசிய மதானி டாக்சி புதுப்பித்தல் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், கோலாலம்பூரில் உள்ள டத்தாரான் மெர்டேக்காவில் இன்று தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து அமைச்சகத்தின் தலைமையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சலுகைகளின் தொடர்ச்சியாகும். இதன் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்படும் புதிய டாக்சி மற்றும் வாடகைக் கார்களை வாங்குவதற்கு 100 சதவீத கலால் வரி மற்றும் விற்பனை வரி விலக்கு வழங்கப்படுகிறது.
மேலும், புரோட்டான், டிஆர்பி-ஹைகாம் குழுமம் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த முயற்சியின் மூலம், டாக்சி ஓட்டுநர்கள் தங்களது பழைய வாகனங்களை மாற்றி, புதிய வாகனங்களை எளிதான மற்றும் நெகிழ்வான நிதி வசதிகளுடன் வாங்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இந்தத் திட்டம், தேசிய டாக்சி சேவையின் தரத்தை உயர்த்துவதுடன், ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.






