என் தமிழ்

லிண்டுங் 24 ஜாம் திட்டம்: ஒரே மாதத்தில் 592 விண்ணப்பங்கள்; RM1.2 மில்லியனுக்கும் அதிக இழப்பீடு வழங்கிய PERKESO

கோலாலம்பூர், 03 ஜூலை 2026 : மலேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பான (PERKESO) லிண்டுங் 24 ஜாம் (LINDUNG 24 Jam) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதத்திலேயே, 592 இழப்பீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன், RM1.2 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவி காப்பீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பெர்கேசோ தெரிவித்துள்ளது.

பெர்கேசோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக RM1.16 மில்லியன் மருத்துவ உள்வைப்பு (Implant) செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தற்காலிக இயலாமை நலனுக்காக (Faedah Hilang Upaya Sementara) RM99,269 வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தினசரி சராசரியாக சுமார் 20 வழக்குகள் பதிவாகி வருவதாக பெர்கேசோ தெரிவித்துள்ளது. இதன் மூலம், வேலை நேரத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகளுக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

லிண்டுங் 24 ஜாம் திட்டத்தின் கீழ், பணிநேரத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969-ன் (Act 4) கீழ் பதிவு செய்யப்பட்ட பணியாளர்கள், சம்பளப் பிடித்தம் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையிலும் தானாகவே இந்தப் பாதுகாப்பைப் பெறுகின்றனர்.

தொழிலாளர்கள் யாரும் சமூகப் பாதுகாப்பிலிருந்து விலகிவிடாத வகையில், லிண்டுங் 24 ஜாம் திட்டம் குறித்த விழிப்புணர்வை மேலும் விரிவுபடுத்த பெர்கேசோ உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top