என் தமிழ்

மைட்ரோன் எக்ஸ்போ 2026 : எதிர்காலத் தொழில்நுட்பத்தில் மலேசியா முன்னேற வேண்டும் – அன்வர்

கோலாலம்பூர், 28 ஜூன் 2026 : உலகம் போர்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் வல்லரசு நாடுகளின் போட்டிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், மலேசியா தனது தேசியக் கொள்கைகளில் உறுதியாக இருந்து, எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியை தழுவும் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

‘மைட்ரோன் எக்ஸ்போ 2026’ நிகழ்வை வரவேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்ப முன்னேற்றம் வேகமெடுத்து வரும் சூழலில், பாரம்பரிய பொருளாதாரத் துறைகளை மட்டும் நம்பி இருக்க முடியாது என்றார். குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் போன்ற துறைகள், நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய இயக்க சக்திகளாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நாடுகள் பின்தங்கும் அபாயம் இருப்பதாகவும், புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்து புதுமைகளை உருவாக்கும் நாடுகளே உலகளவில் முன்னிலை வகிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

‘மைட்ரோன் எக்ஸ்போ 2026’ போன்ற முன்னெடுப்புகள் இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே புதுமைச் சிந்தனையை ஊக்குவிக்கும் முக்கிய தளமாக அமையும் என அவர் தெரிவித்தார்.

மலேசியா புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நாடாக மட்டுமின்றி, உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிக்கும் கண்டுபிடிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கும் நாடாக மாற வேண்டும் என்பதே மதானி அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்குத் தேவையான ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பச் சூழலை அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அன்வர் இப்ராஹிம் உறுதியளித்தார்.

Scroll to Top