ஜோகூர், 27 ஜூன் 2026 : ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் இயந்திரங்களும் மற்றும் ஆதரவாளர்களும் ஆரோக்கியமான, பொறுப்பான மற்றும் உண்மைத் தகவல்களின் அடிப்படையிலான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தியுள்ளார்.
பத்து பஹாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக நடைமுறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க, அவதூறு, பொய்யான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம் என்றார்.
தேர்தல் காலத்தில் சட்டத்தை மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் (SPR) மற்றும் மலேசிய அரச காவல்துறை (PDRM) சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்காது என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC), சமூக ஊடகத் தளங்களுடன் இணைந்து பொய்யான தகவல்கள் மற்றும் இனம், மதம், அரச குடும்பம் தொடர்பான உணர்வுபூர்வமான (3R) பதிவுகள் பரவுவதைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் மக்களின் நம்பிக்கையைப் பெற விரும்பினால், உண்மைத் தகவல்கள், தங்களின் செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கான திட்டங்களை மையமாகக் கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதுவே ஜனநாயகத்தின் தொடர்ச்சியையும் தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் என்றும் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.






