என் தமிழ்

மனிதநேயத்தை விதைத்த தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் இரத்த தான முகாம் : அமோக ஆதரவு!

மலாக்கா, 02 ஜூன் 2026 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையும், மலாக்கா மாநிலத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையும் இணைந்து நடத்திய ‘இரத்த தான முகாம் 2026’, மலாக்கா ஆயர் குரோவில் அமைந்துள்ள மைடின் வணிக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 70-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமில், பல்வேறு இன, மத, மொழிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். “ஒரு துளி குருதி, ஒரு மில்லியன் நம்பிக்கை” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இரத்த தானத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், சமூக ஒற்றுமையையும் வலியுறுத்தியது.

நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த செல்வி மயூரி சந்திரசேகரன் கூறுகையில், முகாமின் வெற்றிக்கு பங்களித்த இரத்தக் கொடையாளர்கள், தொண்டூழியர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தானமாக வழங்கப்பட்ட ஒவ்வொரு யூனிட் இரத்தமும், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இளைஞர்களிடையே சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தன்னார்வத் தொண்டு மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் இதுபோன்ற சமூக நலத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் இளைஞர் மணிமன்றம் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்திலும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கும் வகையில் இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் தங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

Scroll to Top