என் தமிழ்

ஜோகூர் தேர்தல்: பக்கத்தான் ஹரப்பான் சார்பில் 56 வேட்பாளர்கள் அறிவிப்பு

ஜோகூர், 23 ஜூன் 2026 : வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் சார்பில் மொத்தம் 56 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பல்லின சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, உள்ளூர் மக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு அருகில் இருந்து செயல்படுவார்கள் என்றும் அவர் கூறினார். கூட்டாட்சி மட்டத்தில் கிடைத்துள்ள செயல்திறன் மற்றும் அரசின் பல்வேறு முன்னெடுப்புகள், இந்தத் தேர்தலில் நம்பிக்கையுடன் நுழைய காரணமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜோகூரின் பொருளாதார பங்களிப்பு மற்றும் வளர்ச்சி குறித்தும் அவர் விளக்கினார். ஜோகூர் கூட்டாட்சிக்கு சுமார் RM14 பில்லியன் அளவில் பங்களிக்கின்ற நிலையில், மாநில வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் நலனுக்காக RM16 பில்லியனுக்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், ஜனநாயக நடைமுறை ஆரோக்கியமாக தொடர வேண்டும் என்றும், தேர்தல் போட்டிகள் அரச நிறுவனங்களை பயன்படுத்தாமல், உண்மைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்களின் ஆதரவை பெற இன அல்லது மத உணர்வுகளை தூண்டும் வகையில் செயல்படக் கூடாது என்றும், தேர்தல் என்பது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பான போட்டியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Scroll to Top