புத்ராஜெயா, 22 ஜூன் 2026 : வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று மலேசியா வந்தடைந்தார். புத்ராஜெயாவில் அவருக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தலைமையில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிப்ரவரி 2026-ல் பிரதமராக பதவியேற்ற பிறகு, தாரிக் ரஹ்மான் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ இருதரப்புப் பயணமாக மலேசியா அமைந்துள்ளது. இதன் மூலம், மலேசியா–வங்கதேச உறவுகளின் வலிமை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்படுவதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பெர்டானா புத்ரா வளாகத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், மேஜர் நூர் அஹ்மத் ஸைம் ஸஹரி தலைமையிலான ராயல் மலாய் ரெஜிமென்ட்டின் முதல் பட்டாலியனைச் சேர்ந்த 105 வீரர்களும் மூன்று அதிகாரிகளும் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின்னர், இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், பிரதமர் தாரிக் ரஹ்மான் கௌரவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளின் பிரதமர்களும் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இதில் வர்த்தகம், முதலீடு, தொழிலாளர் நலன், கல்வி, பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பரஸ்பர நலன் சார்ந்த அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்தப் பயணம், மலேசியா–வங்கதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.






