என் தமிழ்

வங்கதேச பிரதமருக்கு வரவேற்பு : புத்ராஜெயாவில் அதிகாரப்பூர்வ அணிவகுப்பு மரியாதை

புத்ராஜெயா, 22 ஜூன் 2026 : மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு, புத்ராஜெயாவில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன், அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளின் பிரதமர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வர்த்தகம், முதலீடு, தொழிலாளர் நலன், கல்வி, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, கலாச்சார ஒத்துழைப்பு, முதலீட்டு மேம்பாடு மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச பிரதமராக பதவியேற்ற பிறகு தாரிக் ரஹ்மான் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அதிகாரப்பூர்வ பயணங்களில் ஒன்றாக மலேசியா பயணம் அமைந்துள்ளது. இந்தப் பயணம், மலேசியா–வங்கதேச உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top