20 ஜூன் 2026 : ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்குள் உள்ள இலக்குகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுக்களின் முகாம்களே தாக்குதலின் இலக்காக இருந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆப்கானிஸ்தான் முன்வைத்த தாக்குதல் குறித்த தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. தங்கள் வான்வெளிக்குள் ஆப்கானிஸ்தான் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்றும், எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் செயல்படும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாக பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதன் காரணமாக எல்லைப் பகுதியில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அண்மைய சம்பவம் இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.






