கோலாலம்பூர், 20 ஜூன் 2026 : மலேசியாவின் 15ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வுக்கான இரண்டாவது கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதால் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குறிப்பாக, பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகளாக வரையறுக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது. இதற்கு முன்னர் இந்த மசோதாவுக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் அது நிறைவேறவில்லை.
அதேவேளை, சட்டத்துறைத் தலைமை அதிகாரி மற்றும் அரசு வழக்குரைஞரின் பொறுப்புகளை தனித்தனியாகப் பிரிக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதாவும் மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்பு இந்த மசோதா நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக்குழுவின் மேலாய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
மேலும், இணையக் குற்றங்கள் தொடர்பான புதிய சட்ட மசோதாவும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இல் திருத்தம் கொண்டுவரும் மசோதாவும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. சட்டவிரோத சாலைப் பந்தயங்கள், “டோன்டோ” எனப்படும் கண்காணிப்பு கும்பல்களின் நடவடிக்கைகள் மற்றும் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் அம்சங்கள் இந்தத் திருத்தங்களில் இடம்பெற்றுள்ளன.
ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், உலகளாவிய எரிசக்தி விநியோக நெருக்கடி, பொருளாதாரம், வாழ்க்கைச் செலவு, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மக்களவையின் சபாநாயகர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் விவாதங்களில் பங்கேற்று, அரசியல் குற்றச்சாட்டுகளை விட மக்களின் நலனுக்கான விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.






