ஜொகூர், 16 ஜூன் 2026 : தேர்தல் வெற்றி மட்டுமே அரசியலின் இறுதி இலக்கல்ல என்றும், நாட்டை நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் கருணையின் அடிப்படையில் முன்னேற்றும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மக்களிடம் உரையாற்றிய அவர், மலேசியா வெறுப்பு மற்றும் அதிகார துஷ்பிரயோக அரசியலால் தொடர்ந்து வழிநடத்தப்படுமா அல்லது மக்களின் நலனை மையமாகக் கொண்ட பொறுப்புமிக்க ஆட்சியை நோக்கி நகருமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய தருணத்தில் நாடு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“நாம் முன்வைப்பது வெறும் கோஷங்களோ அல்லது வாக்குறுதிகளோ அல்ல. ஆட்சிமுறையை வலுப்படுத்துதல், கசிவுகளைத் தடுப்பது, முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் மலேசியா மீதான சர்வதேச நம்பிக்கையை மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு முன்னேற்றங்களை நாம் சாதித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.



எனினும், நாட்டின் முன்னேற்றப் பயணம் இன்னும் நிறைவடையவில்லை என்றும், மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சமூகத்தின் பல தரப்பினரின் குரல்கள் இன்னும் கேட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளை சரிசெய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்ட அரசியலை பாதுகாக்குமாறு ஜொகூர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர், மக்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் மலேசியாவை வலிமையான, நேர்மையான மற்றும் கண்ணியமிக்க நாடாக மாற்ற அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்தார்.






