புத்ராஜெயா, 16 ஜூன் 2026 : பொது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து, சட்ட நடவடிக்கை எடுப்பதை உயர்கல்வி அமைச்சு (KPT) பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஜித்ரா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹைம் ஹில்மான் அப்துல்லா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகளில், பொது பல்கலைக்கழகங்கள் “பின்வாசல் வழியாக” மாணவர் சேர்க்கைக்காக இடங்களை விற்பனை செய்கின்றன என்ற குற்றச்சாட்டு இடம்பெற்றிருந்தது. இந்தக் கருத்து ஜூன் 13 ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை மட்டுமல்லாமல், நாட்டின் உயர்கல்வி அமைப்பு, பொது பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக நிர்வாகங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சட்டபூர்வமாக மாணவர் சேர்க்கை பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முதல் முறையாக முன்வைக்கப்படவில்லை என்றும், அமைச்சு எப்போதும் ஆக்கபூர்வமான மற்றும் ஆதாரபூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறது என்றும் கூறியுள்ளது. எனினும், எந்தவொரு குற்றச்சாட்டும் உறுதியான ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அமைச்சின் நேர்மை, பொது பல்கலைக்கழகங்களின் நம்பகத்தன்மை மற்றும் நாட்டின் உயர்கல்வி அமைப்பின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், உரிய சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளை அமைச்சு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும், பொறுப்பற்ற அறிக்கைகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.






