கோலாலம்பூர், 16 ஜூன் 2026 : புக்கிட் கியாரா லாங்ஹவுஸ் குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர வீட்டு வசதித் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், 44 ஆண்டுகளாக நீடித்து வந்த புக்கிட் கியாரா லாங்ஹவுஸ் குடியிருப்பாளர்களின் வீட்டு வசதிப் பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுத்த பிரதமரின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான தலைமைத்துவத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
1982 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த பிரச்சினைக்கு தற்போது நிரந்தர தீர்வு கிடைத்திருப்பது, மதானி அரசாங்கத்தின் மக்கள்மைய நிர்வாகத்தை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகும் என்று அவர் கூறினார்.
“இது வெறும் வீட்டு வசதித் திட்டம் மட்டுமல்ல. பல தசாப்தங்களாக காத்திருந்த மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் எதிர்கால நம்பிக்கையை மீட்டெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாகும்,” என்று ரமணன் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையும் 98 குடும்பங்களுக்காக, அப்பகுதியின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திற்கு (DBKL) RM1 மில்லியன் ஒதுக்கீட்டை பிரதமர் அறிவித்ததையும் அவர் வரவேற்றார்.



பௌதீக ரீதியில் சிறிய திட்டமாகத் தோன்றினாலும், நீண்டகாலமாக வீட்டு வசதிக்காக காத்திருந்த குடும்பங்களின் வாழ்க்கையில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்த கூட்டாட்சிப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி மேயர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மைமுனா முகமது ஷரீப் தலைமையிலான நிர்வாகத்திற்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
புக்கிட் கியாரா லாங்ஹவுஸ் சமூகத்திற்கு புதிய நம்பிக்கையையும் சிறந்த எதிர்காலத்தையும் வழங்கும் இந்தத் திட்டம், மக்களின் நலனில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக ரமணன் கூறினார்.






