கோலாலம்பூர், 15 ஜூன் 2026 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, தாங்கள் ம.இ.கா. கட்சியைப் புறக்கணித்துவிட்டதாக கெப்போங் தொகுதி ம.இ.கா. தலைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட கருத்துகளை கடுமையாக மறுத்துள்ளது.
பேரவையின் தேசியத் தலைவர் முருகன் மணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணமூர்த்தியின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவை மணிமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசுகையில், தற்போதைய மணிமன்றத் தலைமை ம.இ.கா.விற்கு உரிய மரியாதை வழங்குவதில்லை என்றும், தலைமைத்துவ பண்புகள் இல்லை என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்துகள் மணிமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மணிமன்றத்தின் உயரிய விருதான “மணிமைந்தன் விருது” கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அவர் அதே அமைப்பின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வருத்தமளிப்பதாக முருகன் மணியம் கூறியுள்ளார்.
மேலும், மணிமன்றப் பேரவை ம.இ.கா.வை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றும், தேசிய மற்றும் மாநில அளவிலான பல மணிமன்றத் தலைவர்கள் ம.இ.கா.வில் பொறுப்புகளை வகித்து வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். ம.இ.கா. தேசியத் தலைமையுடனான உறவு சுமுகமாகவும் வலுவாகவும் தொடர்ந்து இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மணிமன்றத்தின் பெயரை பயன்படுத்தி தனிப்பட்ட அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளை ஏற்க முடியாது என்றும், இளைஞர்களை தவறாக வழிநடத்தும் கருத்துகளை வெளியிடுவதை கிருஷ்ணமூர்த்தி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ம.இ.கா. மற்றும் மணிமன்றப் பேரவைக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, இந்த விவகாரத்தை ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கவனத்திற்கு கொண்டு செல்ல பேரவை முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற கருத்துகள் தொடர்ந்து வெளியிடப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என மணிமன்றப் பேரவை எச்சரித்துள்ளது.







