14 ஜூன் 2026 : திரெங்கானு அனைத்துலக அறிவியல் கண்காட்சி (TISF) 2026 போட்டியில் சிறப்பான சாதனை படைத்த கிளாங், எஸ்ஜேகே(தி) சிம்பாங் லிமா பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவர் அரீஷ் ஷர்மா, கோலாலம்பூரிலுள்ள புசாட் பெலியா அந்தராபங்சாவில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.
மலேசிய இளம் விஞ்ஞானிகள் அமைப்பு (MYSO) ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில், தனது புதுமையான அறிவியல் திட்டத்தின் மூலம் அரீஷ் ஷர்மா தங்கப் பதக்கத்தை வென்றதுடன், ‘சிறந்த தனிநபர் விளக்குநர் விருது’ மற்றும் ‘உலக இளம் திறமையாளர் சிறப்பு விருது’ ஆகிய இரு உயரிய விருதுகளையும் கைப்பற்றினார்.
அவரது தன்னம்பிக்கையான விளக்கத் திறன், அறிவியல் சிந்தனை மற்றும் புதுமையான அணுகுமுறை ஆகியவை நடுவர்களின் பாராட்டைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சாதனை, தமிழ் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்துவதோடு, நாட்டின் எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதில் தமிழ் பள்ளிகளின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர் அரீஷ் ஷர்மாவின் இந்த வெற்றி, பிற மாணவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.






