என் தமிழ்

உலகின் முதல் டிரில்லியனர்: புதிய வரலாறு படைத்த எலான் மஸ்க்

வாஷிங்டன், 13 ஜூன் 2026 : உலகின் மிகப் பெரும் பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க், உலக வரலாற்றில் முதன்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (US$1 Trillion) சொத்து மதிப்பை எட்டிய முதல் நபராக புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

அவரது விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான SpaceX, வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்குச் சந்தை அறிமுகங்களில் ஒன்றை மேற்கொண்டதைத் தொடர்ந்து, மஸ்க்கின் சொத்து மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SpaceX நிறுவனத்தின் பங்குகள் அறிமுகமான முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்தன. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்ததுடன், நிறுவனத்தில் மஸ்க் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பும் பெருமளவில் அதிகரித்தது.

தற்போது SpaceX, Tesla, xAI, Starlink, X (முன்னாள் Twitter), Neuralink மற்றும் The Boring Company உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் எலான் மஸ்க் முக்கிய பங்குகளை வைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பின் பெரும்பகுதி SpaceX மற்றும் Tesla நிறுவனங்களில் உள்ள பங்குகளிலிருந்து உருவாகியுள்ளது.

2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட SpaceX, விண்வெளி ஏவுதள சேவைகள், செயற்கைக்கோள் இணைய சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. நிறுவனத்தின் பங்குச் சந்தை அறிமுகம் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் இந்த சாதனை உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேவேளை, உலகளாவிய செல்வப் பாகுபாடு மற்றும் மிகப்பெரிய தனிநபர் செல்வச் சுரண்டல் குறித்து புதிய விவாதங்களுக்கும் இது வழிவகுத்துள்ளது.

Scroll to Top