என் தமிழ்

தேசிய சதுரங்கப் போட்டியில் தேசிய வகை சிதம்பரம் பிள்ளை தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை

தெலுக் இந்தான், 04 ஜூன் 2026 : பினாங்கு மாநிலத்தில் உள்ள தேசிய வகை ஆசாத் தமிழ்ப் பள்ளி மற்றும் தேஜய் பிரில்லியண்ட் செஸ் அகாடமி இணைந்து நடத்திய 2026 தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில், பேராக் மாநிலம் தெலுக் இந்தானில் அமைந்துள்ள தேசிய வகை சிதம்பரம் பிள்ளை தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர்.

10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற திவ்னேஷ் கலைசெல்வன் அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி தேசிய சாம்பியன் பட்டத்தையும் தங்கக் கோப்பையையும் வென்றுள்ளார்.

அதேவேளை, 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட சிவனேஷ் கலைசெல்வன் தேசிய அளவில் நான்காவது இடத்தைப் பெற்று பள்ளிக்கும் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இளம் வயதிலேயே தேசிய அளவிலான போட்டியில் சிறந்து விளங்கிய இந்த இரு மாணவர்களின் சாதனை, எஸ்.ஜே.கே.டி சிதம்பரம் பிள்ளை பள்ளியின் கல்வி மற்றும் இணைப் பாடத்திட்டச் செயல்பாடுகளுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் இந்த வெற்றிக்கு அவர்களை வழிநடத்திய பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அரங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்திய திவ்னேஷ் கலைசெல்வன் மற்றும் சிவனேஷ் கலைசெல்வன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் எதிர்காலத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று சிறப்பான வெற்றிகளைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையையும் பள்ளி சமூகம் வெளியிட்டுள்ளது.

Scroll to Top