ஈப்போ, 03 ஜூன் 2026 : ஒரு நகரத்தின் முன்னேற்றம் என்பது கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியால் மட்டும் அளவிடப்படக் கூடாது என்றும், கலை, கலாசாரம் மற்றும் சமூக ஒற்றுமையும் அதனுடன் இணைந்து வளர வேண்டும் என்றும் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் (Nga Kor Ming) வலியுறுத்தியுள்ளார்.
ஈப்போவில் நேற்று நடைபெற்ற “MADANI Philharmonic Musical Concert 2026: A Tune of Friendship and Unity in Harmony” நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், மக்களுக்கு மலிவு விலை வீடுகள், பொதுக் கட்டமைப்புகள் மற்றும் வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும், நவீனமயமாக்கல் மற்றும் வேகமான நகர்ப்புற வளர்ச்சி மட்டுமே ஒரு நகரத்தை சிறப்பாக்காது என்றும், மனிதநேயம், கலை, கலாசாரம் மற்றும் சமூக நல்லிணக்கம் புறக்கணிக்கப்பட்டால் நகரங்கள் தங்களின் அடையாளத்தையும் உயிர்ப்பையும் இழக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
“கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் மக்களிடையே சொந்தத்தன்மை உணர்வை ஏற்படுத்துகின்றன. பல்வேறு இன மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்து, பரஸ்பர புரிதல், மரியாதை மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களில் சமூக ஒற்றுமை, கலாசார அடையாளம் மற்றும் கலைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அவை நகர்ப்புற வளர்ச்சியின் பிரிக்க முடியாத அங்கங்களாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.






