27 மே 2026 : ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் அம்சங்கள் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் “தத் த்வம் அஸி” படத்தின் படப்பிடிப்பு, கடந்த மே 26 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்வுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரார்த்தனை, நேர்மறை எண்ணங்கள் மற்றும் படக்குழுவினரின் அர்ப்பணிப்புடன் நடைபெற்ற பூஜை நிகழ்வு, படத்தின் பயணத்திற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முன் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது படக்குழுவின் திட்டமிட்ட செயல்பாட்டையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
படப்பிடிப்பு தொடக்க விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை இயக்கி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற “மாளிகப்புரம்” திரைப்படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுபூர்வமாக திரையில் காட்சிப்படுத்திய அவரது அனுபவம், இந்தப் படத்திற்கும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் நடிகர் வைபவ் மற்றும் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில், ஆக்சன், உணர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் கவரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தை ஜே.கே. சரவணா மற்றும் ஜே.கே. சதீஷ் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை யுவன் செல்வா மேற்கொள்கிறார். படத்தொகுப்பை பிரவீன் கே.எல். கவனிக்க, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார்.
எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா ஆகியோர் இணைந்துள்ளனர்.
மேலும், தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் “ஆர்ய கேரள வர்மன்” திரைப்படமும் வரலாற்று மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு இந்த ஆண்டிலேயே “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளும் மாஸ் அம்சங்களும் கலந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.








