என் தமிழ்

“கனவு மெய்ப்பட” தன்முனைப்பு உரை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்

02 ஜூன் 2026 : பிரபல பேச்சாளர் டாக்டர் பர்வின் சுல்தானா தலைமையில் நடைபெற்ற “கனவு மெய்ப்பட” எனும் தன்முனைப்பு உரை நிகழ்ச்சியை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய அவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான, “கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும், தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்” என்பதை மேற்கோள்காட்டி, கனவுகள் மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைகின்றன என்று கூறினார்.

“கனவு மெய்ப்பட வேண்டும்” என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பல்ல; அது ஒவ்வொருவரின் உள்ளத்திலிருந்தும் எழும் உறுதியான இலட்சியக் குரலாகும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தங்களது கனவுகளை தெளிவாக வரையறுத்து அதனை அடைவதற்காக தொடர்ந்து உழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல; நம்மைத் தூங்க விடாமல் செய்வதே உண்மையான கனவு” என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொருவரும் உயர்ந்த இலக்குகளையும் உன்னதமான கனவுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

மேலும், வெற்றியை அடைவதற்கு திறமை மட்டுமல்ல, நேர்மறை சிந்தனை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பும் அவசியம் என்று தெரிவித்தார். இம்மூன்றும் ஒருங்கிணைந்தால், பாரதியார் கூறியபடி கனவுகள் நனவாகி, வெற்றிகள் விரைவில் கைவசமாகும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

“சுடர்விளக்காயினும் தூண்டுகோள் வேண்டும்” என்ற பழமொழியை மேற்கோள்காட்டிய டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன், சமூகத்தில் பலருக்கு ஊக்கமளிக்கும் வகையில் “கனவு மெய்ப்பட” என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எம்.எஸ்.கே. மேரி அவர்களுக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

பின்னர், டாக்டர் பர்வின் சுல்தானா தனது சிறப்புரையில், வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கை, தெளிவான இலக்கு மற்றும் தொடர்ச்சியான முயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவரது ஊக்கமூட்டும் உரை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்ச்சி, தனிமனித மேம்பாடு, வெற்றிக்கான மனப்பாங்கு மற்றும் இலட்சியங்களை நனவாக்கும் உந்துதலை வழங்கிய பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.

Scroll to Top