வாஷிங்டன், 31 மே 2026 : அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெறுவதற்கான நடைமுறைகள் தொடர்பாக சமீபத்தில் எழுந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று அங்கிருந்தே விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பும் கவலையும் எழுந்த நிலையில், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயமாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விண்ணப்பமும் தனித்தனியாக பரிசீலிக்கப்பட்டு, குறிப்பிட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் மட்டுமே வெளிநாடு சென்று செயல்முறையை முடிக்க வேண்டுமா என்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் அல்லது கூடுதல் ஆய்வு தேவைப்படும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே இந்த நடைமுறை பொருந்தக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், சட்டபூர்வமாக அமெரிக்காவில் வசித்து வரும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள், நாட்டை விட்டு வெளியேறாமல் தங்களது கிரீன் கார்டு விண்ணப்ப செயல்முறையைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.






