23 மே 2026 : மலேசிய அரசாங்கம், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பான SKDS திட்டத்தை நாடு முழுவதும் கூடுதல் நான்கு சக்கர வாகனங்களுக்கும் விரிவுபடுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய நடைமுறை ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் அர்மிசான் முகமது அலி தெரிவித்ததாவது, இதற்கு முன்பு ஜீப் மற்றும் பிக்கப் வகை வாகனங்களுக்கு கேமரூன் ஹைலண்ட்ஸ் பகுதியில் மட்டும் தகுதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து துறையில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.
மேலும், தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஜீப் மற்றும் பிக்கப் வாகனங்களையும் நிறுவனப் பெயருக்கு மாற்றிய பின்னர் SKDS திட்டத்தின் கீழ் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒவ்வொரு “Fleet Card”-க்கும் மாதந்தோறும் 900 லிட்டர் முதல் 5,000 லிட்டர் வரை நிரந்தர டீசல் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளின் பயன்பாட்டு தரவுகளின் அடிப்படையில் இந்த அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிக டீசல் தேவைப்படும் நிறுவனங்கள், கூடுதல் ஒதுக்கீட்டிற்காக ஆன்லைன் அல்லது KPDN அலுவலகங்கள் வழியாக முறையீடு செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். SKDS திட்டத்தின் கீழ் தற்போது 23 வகையான நில சரக்கு போக்குவரத்து வாகனங்கள் லிட்டருக்கு RM2.15 மானிய விலையில் டீசலைப் பெறுகின்றன.
அரசாங்கத்தின் தகவலின்படி, இதுவரை 1,79,716 நிறுவனங்கள் மற்றும் 4,32,495 வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மானிய திட்டங்களின் பயனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





