இந்தோனேஷியா, 07 ஜூலை 2026 : இந்தியாவின் ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அதன் முதல் கட்டமாக இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். அப்போது, இந்தோனேஷிய விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் அவரது விமானத்தை புடைசூழ்ந்து பாதுகாப்பு மரியாதையுடன் வரவேற்றன.
ஜகார்த்தா விமான நிலையத்தில், இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தேசிய கீதங்களுடன் அரசு மரியாதை அளிக்கப்பட்டதுடன், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பிரதமர் மோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும், இந்தோனேஷிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்தப் பயணத்தின் போது, இந்தியா–இந்தோனேஷியா இடையிலான விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், யோக்யகார்த்தாவில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பிரம்பானன் இந்து ஆலய வளாகத்தையும் பிரதமர் மோடி பார்வையிடவுள்ளதுடன், இந்தோனேஷியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாட உள்ளார். இந்தோனேஷியா பயணத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கும் பிரதமர் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.






